நதிகள்
கடல்களை எனக்குள்
திறந்து வைத்து
அலறும் தீவுகளையும்
காட்டின
கரும்புகள்
பூவினங்களை எனக்குள்
மலர்வித்து
முள்களின் முனைகளில்
காத்திருக்கும்
குத்தல்களின் முகங்களையும்
காட்டின
நட்சத்திரங்கள்
சூரியர்களை
எனக்குள்
பிறப்பித்து
கண் விழித்த காந்தப்புயல்
மய்யங்களையும்
நிறுவின
வைகறைகள்
பகல்களை எனக்குள்
பயிரிட்டு அறுவடைக்கு வரும்
அந்திகளின் கைகளில்
என் முகவரியும்
தந்தன
எழுத்துகள்
கவிதைகளை எனக்குள்ளே
இயற்றிவைத்து
மயக்கங்களையும்
அர்த்தங்களின் கைகளிலேயே
ஒளித்து வைத்தன
நான்
வாழ்க்கையை எனக்குள்ளே
உயிர்ப்பித்தூப்
பறித்து வந்த
மரணத்திற்கும்
கதவைத்
திறந்து வைத்தேன்.
