ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Friday, June 16, 2006

தை இரண்டாம் இதழ்

இதழாகத்தான் தொடங்கினோம்
இயக்கமாகி விட்டது.

முதல் பதிப்பு போதாமல் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது...
ஓர் இலக்கிய இதழ். தமிழில்... தமிழ்நாட்டில்...

கைநாட்டு மரபிலிருந்து... கையெழுத்து மரபிற்குக்
கரையேற்றிய அந்த ஈரோட்டுக் கிழவரின் எதிர்நீச்சல்
வெற்றியாகத்தான் இதனை உணர்கிறோம்.

கறுநீர் மடுவில் களிப்போடு மீன்களோடு மீன்களாய்
நீச்சலடித்துக் கொண்டிருந்தவரை
அற்ப சூழ்ச்சியில் போய் அமுக்கி
ஆழத்திலேயே கொல்லப் பார்த்தவரின்
கொடும்பிடியிலிருந்துத் திமிறி உதறி உந்தி
மேல்வந்து வானம் வாங்கி
மூச்சுவிடுகிற வேகத்தில் வெளிப்படுகிறது
இன்றைய தமிழர்களின் தமிழ்க் கவிதை.

என்ன எழுதியிருக்கிறாள், என்ன எழுதியிருக்கிறான்
என்பது தெரியாத எம் ஏடறியா எழுத்தறியா பாமரத் தாய்கள்
இந்தத் தை இதழை ஏந்திப்போய்
எதிர்வீட்டுக்காரர்களிடமெல்லாம்
காட்டிக்காட்டி
என் மகள் எழுதியதைப் பாருங்கள்
என் மகன் எழுதியதைப்பாருங்கள் என்று
ஏக்கம் தீர்க்கிறார்கள் என்கிற செய்தியையே
வியர்வைத் திங்களின்
வெற்றியாகப் பதிவு செய்கிறோம்.

அங்கங்கே அழைத்தழைத்து அறிமுக விழா நடத்தி
அம்மாவின் முந்தானை அவிழ்ப்பாய்
ஆதரவு தருகிற அனைத்து
அன்புள்ளங்களுக்கும்
உறுதிதருகிறோம்
கவிதைகளுக்கான இந்த இதழை
தொடர்ந்து கொண்டுவருவோம்...

Monday, March 06, 2006

முடிவுகள் -ஈரோடு தமிழ்ன்பன்

நதிகள்
கடல்களை எனக்குள்
திறந்து வைத்து
அலறும் தீவுகளையும்
காட்டின

கரும்புகள்
பூவினங்களை எனக்குள்
மலர்வித்து
முள்களின் முனைகளில்
காத்திருக்கும்
குத்தல்களின் முகங்களையும்
காட்டின

நட்சத்திரங்கள்
சூரியர்களை
எனக்குள்
பிறப்பித்து
கண் விழித்த காந்தப்புயல்
மய்யங்களையும்
நிறுவின

வைகறைகள்
பகல்களை எனக்குள்
பயிரிட்டு அறுவடைக்கு வரும்
அந்திகளின் கைகளில்
என் முகவரியும்
தந்தன

எழுத்துகள்
கவிதைகளை எனக்குள்ளே
இயற்றிவைத்து
மயக்கங்களையும்
அர்த்தங்களின் கைகளிலேயே
ஒளித்து வைத்தன

நான்
வாழ்க்கையை எனக்குள்ளே
உயிர்ப்பித்தூப்
பறித்து வந்த
மரணத்திற்கும்
கதவைத்
திறந்து வைத்தேன்.

Friday, March 03, 2006

கன்னடக் கவிதைகள்

கன்னடப் பாட்டு
ஜி.பி. இராசரத்தினம்

கள்ளு
பொண்டாட்டி
கன்னடப்பாட்டு
இது மூணுன்னா
எனக்கு
உசிருங்க

மூக்குப் புடிக்க
கள்ள
உள்ள
ஊத்திகிட்டேன்னு
வையுங்க
அம்புட்டுதா
அம்பு மாதிரி
சரஞ்சரமா அய்யாவுக்கு
வந்துகிட்டே இருக்கும்
கன்னடப்
பாட்டு

எக்குத்தப்பா
எறங்கி வந்து
எம்முன்னால
சாமி கீமு
தீடீர்னு
நின்னாருன்னு
வச்சுக்கிங்க
ஏதோ நம்மள சோதிக்கதா
வந்திருக்காருன்னு
நெனச்சிக்கிட்டு
என்னா சாமிம்பேன்!

இன்னியோட
கள்ளு
உட்டுர்றா
ராசரத்தினம்னு
எங்கிட சாமி
கேட்பார்ன்னா
முந்திரிக்கொட்ட மாதிரி
மூக்கு
முந்திகிட்டு வந்து
அது எப்படி சாமி
அவசரமா உடமுடியும்ன்னு
அழும்பு பண்ணிச்சின்னு
வச்சிக்குங்க

அந்த
மூக்க அப்பவே
ஆறேழுதுண்டா
அறுத்து போட்ருவேன்

கள்ளோடு சேத்து
ஒம் பொண்டாட்டியையும்
உட்டார்றான்னா
கேட்டார்ன்னா
நல்லாதாப் போச்சு சாமின்னு
நடுத்தெருவுன்னும் பாக்காம
ஆடிக் கும்மாளம் போட்டுடுவேன்

அப்படியே அந்தக்
கன்னடப் பாட்டு பாட்றதையும்
விட்டுர்றா;
ராசரத்னம்னு
சாமி கேட்டுச்சுன்னு
வச்சுக்குங்க

கெட்டது கத அடுத்த நிமிடமே
ஆண்டவனுக்கு வச்சிடுவேன்
ஆப்பு

எம்மாம் பெரிய மனுசனாத்தான்
இருக்கட்டுமே
ஏன்...
ஆனானப்பட்ட அந்த
ஆண்டவனாவேதா
இருக்கட்டுமே

எங்
கன்னட மொழியைப் பத்தி
அப்பிடி இப்பிடி
ஏதாச்சும் பேசுனாங்கன்னா
அசிங்க அசிங்கமாப் பேசி
மானத்த வாங்கிப் புடுவேன்
வாங்கி...

நரகத்துல தள்ளி
நாக்கப் புடுங்கிப்புட்டு
என்னோட வாயையும்
தச்சுப் போட்டாலுஞ் சரி

முக்கி முக்கி
எம் மூக்காலயாவது
பாடிப்புடுவேன்
எங் கன்னடப் பாட்ட

கள்லு பொண்டாட்டி
எதுனாலுஞ்சரி
இந்த உலகத்துல
இல்லாம போவட்டும்

ஆனா
உலகம் இருக்கிற வரைக்கும்
எங் கன்னடப்பாட்டு வாழட்டும்

மேலும் பல சிறப்பான கவிதைகள் நிறைந்த தை இதழைப் படியுங்கள்

Wednesday, March 01, 2006

நாகலாபுரத்தான் கவிதைகள்

காற்று
அந்த வெற்றுக் காகிதத்தை
ஏதோ ஒரு திசையின்
விளிம்பிற்குத் துரத்துகிறது
உனக்கான கவிதையுடன்
உலகத்திற்கு வெளியே
காத்திருக்கிறேன்
*

நதியின் ஆழத்தில்
பழகிக் கொண்டிருக்கிறேன்
பிரிவதற்கு

Tuesday, February 28, 2006

மேத்தா கவிதைகள்

நினைவு நாள்

செத்துப்போனவர்கள்
அஞ்சலி செலுத்துகிறார்கள்
எப்போதும் உயிரோடு
இருப்பவர்களுக்கு
*

வழுவமைதி

வசதி உள்ளவர்கள்
வழுக்கி விழுந்தால்
குளியல் அறை என்று
கூறுக

பஞ்சை பராரிகள்
வழுக்கி விழுந்தால்
படுக்கை அறை என்று
பகர்க

மதிப்பீடு

எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன

கால்நடைக்கு தெரியுமா
கவிதை நடை?

ஒற்றைக் காலால்
ஒங்கி மிதிக்கிறார்கள்
இரண்டு கால்களில்
விழுந்து எழுந்தவர்கள்
*

சிறுகுறிப்பு வரைக

அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்

அமெரிக்காவோ
எண்ணெய்க்காகவே
வளைகுடா நாடுகளில்
தலையைத் தடவுகிறது.


ஈராக்

ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது?
*

மனக்கதவு

யார் தட்டிய போதும்
திறந்ததே இல்லை

இப்போது
ஒவ்வொரு கதவையும்
ஓங்கி ஓங்கி தட்டி
ஓய்ந்தபோது
தெரிகிறது

தட்டும் கையின் வலியும்
திறக்காத கையின் திமிரும்
*

கொம்பு முளைத்துவிடுகிறது
மாடுகளைப்போல்
தலையாட்டும்
மனிதர்களுக்கும்!

Monday, February 20, 2006

''தை''

அக்கா - சிற்பி

அந்த கிராமம்
கல்யாண வீடு மாதிரி
வாழைத் தோப்புகள்
நான்கு புறமும்
தலையசைத்து வரவேற்கும்

என் அக்கா
வாழ்ந்து முடித்த மண்

செம்மண் படிந்த என் தலையை
மடியில் சாய்த்து
ஈர்க்கோதியில் கீறிச் கீறிச்
சடகுச் சடக்கென்று
பேன் குத்துவாள்

இந்த பாழுஞ் சனியனுக
தம்பி ரத்தத்தை
எப்பிடிக் குடிச்சிருக்குது பாரு
என்று வசை பாடுவாள்
*

நண்டும் சிண்டுமான
குழந்தை குட்டிகளோடு
அலைகழியும் அக்கா
அடிக்கடி சொல்லுவாள்:

'எவனுக்கும்
பயப்படாதர தம்பி

என்னெப் பாரு
கட்டின மகராசன்
கனவாப் போயிட்டாரு

தன்னந்தனிக் கட்டையா
நிக்கறேன்
கால்வயிறு சாப்பிட்டு
குழந்தைகளைக் கலங்காமப்
பாத்துக்கிறேன்

மீனாட்சின்ணா
ஆனானப்பட்ட
ஆம்புளக நடுங்குவாங்க
எதுக்கும் பாயப்படாதே
நான் இருக்கறேண்டா'
*

பழுப்பேறிய முகத்தோடு
உழைப்பேறிய கையோடு
ஒவ்வொரு விடுமுறையிலும்
சின்னக் கண்கள் சிரிக்கக்
காத்திருப்பாள் எனக்காக...

'அந்த ஊருல ஒம்மேல
எவளாச்சும் கண்ணுவச்சா
அவ முதுகு பழுத்துரும்
சீவக்கட்டை பிஞ்சுபோகும், ஆமா'...

வெகுளி அக்கா
விண்ணாரம் பேசுவாள்...
*

பேர் சொல்லி
அழைத்தே இராத அக்கா
பிள்ளைகள் பெற்ரே
நோய்க்களமானாள்.
படுக்கை வாசியைப்
பாக்கப் போனேன்

பச்சை குத்திய
எலும்புக் கைகலைப்
பற்றியபோது நடுங்கின...

'ஏங்கண்ணு...
ஒன் நினைப்பாவே இருந்திச்சு...
இனி பொறப்பட்டுருவேன்
ஒரே பயம்தான் கண்ணு
வாய்க்கா மேட்டு
மாசனத்திலே
என்னைய தனியா
விட்டுட்டு வந்தா
ராத்திரி எப்படீடா
அங்கிருப்பேன்...'

அப்பாவி அக்கா
அடங்கு முன் சொன்னேன்:

'அப்புடி உட்டுருவோமா
அக்கா
பெரியய்யன், அப்புச்சி
பசீமக்கா
எல்லாம் அங்கே
தொணயா இருப்பாங்க
பயப்படாத, சொல்லி வச்சுருவம்ல
அக்கா... ஒண்ணும் பயப்படாதே'

ஆறுதல் திரண்டு நீரரய் வழிய
அக்கா கண்கள்
அமைதி கண்டன

முத்துவேல் கவிதைகள்

சுயசரிதை

திருமணத்திற்கு முன்பான
புணர்ச்சித் திருடர்களின்
விடுதி இரவுகளில்
ஒழுகிய உயிரணுக்கள்
என்னைச் செய்திருக்கலாம்

சதை சலித்துக்
காதல் துப்பிய
கள்வனை வெறுத்து
மறுவாழ்வு விரும்பி
மகாராசி யாரோ
யோனியிலிருந்து பிடுங்கி
கோயில் வாசலில்
கிடத்திப் போயிருக்கலாம்.

மெய் விற்று
உயிர் சேமிப்பவளின்
ஒழுக்குக் குடிசையின்
காலொடிந்த கட்டிலில்
ஆணுறை மறந்த எவனோ
எனக்கு அப்பாவாகி
முடித்த அலுப்பில்
புகை ஊதிய படியே
நடந்திருக்கலாம்.

உலகத்துக்குப் பயந்த
உடைந்த நெஞ்சுக்காரி
யாரோ ஒருத்தி
கட்டும் துணியில் சுத்தி
குப்பைத் தொட்டியில்
வீசி விரைந்திருக்கலாம்

எதற்கோ ஏனோ
எங்கய்யோ எப்போதோ
நிச்சயம்
ஒருத்தி முந்தானை
விரித்திருக்க வேண்டும்
ஒருவன் மூச்சு
வாங்கியிருக்க வேண்டும்

இப்போது உங்கள் மனதை
குண்டூசி தைத்துத் தாக்கலாம்
நீங்களாகக் கூட
இருக்கக் கூடும்
எனது அப்பாவாகவோ
அம்மாவாகவோ.

அப்துல் ரகுமான் கவிதைகள்

தூண்டில் இரை(கசல்)

நீ
கண்ணீர்த் துளிகளின்
கீரிடம் அணிந்து
புன்னகை என்னும்
அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
*
உன் கிரணங்கள்
என் காட்டுக்குள்
ஊடுருவ முடியவில்லை
*

நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன
*

காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்
*

என்னுயிரோ
உன்னிடத்தில்
உன்னுயிரோ
என்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?
*

உன் கடிதம் வந்தது
திறக்காமலே
படித்து விட்டேன்
*

வயிற்றுக்காக
வாழ்ந்து
முகமிழந்து போனேன்
*

காதல் துயரமே!
வாழ்க
உன்னால்
மற்ற துயரங்களெல்லாம்
மறைந்துபோய்விட்டன

என்னைப் பிடிக்க
விதி
தன் தூண்டிலில் மாட்டிய
இரை நீ
*

Thursday, February 09, 2006

நீங்கள் துளி, நாங்கள் சமுத்திரம்

29 ஆவது புத்தகக் காட்சியில் ''சிற்பி பாலசுப்ரமணியம்'' பேச்சு.

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் 29வது புத்தக்காட்சி நடக்கிறது. இதில் 'தமிழ்க் கவிதை மாற்றமும் தடுமாற்றமும்' என்ற தலைப்பில் சிற்பி பாலசுப்ரமணியம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இன்றைய புதுக்கவிதையாளர்கள் பாரதியாரை பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும் கூட பாரதிதாசனை ஏற்றுக் கொள்வது இல்லை. பாரதிதாசனின் படைப்புகளைப் பரிசுத்தக் புதுக்கவிதையாளர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. பாரதிதாசனின் கவிதைகள் தமிழ்மொழியின் பண்பாட்டையும், பெருமைகளையும் உயர்த்திப் பிடிப்பவை. அது தமிழ்மொழி வெறியல்ல. தற்போது தமிழ்மொழிப் பற்றை சில புதுக்கவிதையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.மொழி உணர்ச்சி தமிழர்களிடம்தான் கேலிக்குரியதாக உள்ளது. இதை இந்திக்காரர்களிடமோ, கன்னடக்காரர்களிடமோ பார்க்க முடியாது. புதுக்கவிதையாளர்கள் பாரதிதாசனை எப்பொழுது ஏற்றுக் கொள்கின்றனரோ, அப்பொழுதுதான் அவர்களுடைய கவிதையும் மக்கள் கவிதையாக மாற முடியும். பாரதிக்கு பிறகு ஞானக்கூத்தன் மட்டும்தான் கவிஞர் என்று ஒரு புதுக் கவிதையாளர் கூறும் வேடிக்கை தமிழகத்தில் நடக்கிறது.

தமிழ்ஒளி, சா.து.சு. யோகியார் போன்ற கவிஞர்களைப் புதுக் கவிதையாளர்களுக்குத் தெரியாது. கம்பதாசன் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இப்படிப்பட்ட முன்னோர்கள் பற்றி தெரியாதவர்களை மூடர் என்றுதான் கூறுவேன். புதுக் கவிதைகளில் மூட நம்பிக்கை நிரம்பிக் கிடக்கிறது. செய்தி சொல்லும் கவிதையை கவிதை இல்லை என்று சொன்னால் இளங்கோவையும், கம்பரையும், பாரதியையுமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டி இருக்கும். புதுக்கவிதை என்றால் மரபு எதிர்ப்பு, யாப்பு எதிர்ப்பு, என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ஆப்பு என்றால் தெரியும். யாப்பு என்றால் தெரியாது. தெரியாது என்பதாலேயே அதை மறுக்கின்றனர். பரிசுத்த புதுக்கவிதையாளர்களின் கவிதைகளில் எதிர்மறை செய்திகள் இருக்கின்றன. அதில் சமூகத்தை நேசிக்கிறவர்கள் இகழப்படுகின்றனர்.

நீங்கள் ஒரு துளி. நாங்கள் சமுத்திரம்.

(நன்றி- தினகரன்)

உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்றான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அந்தத் தமிழ்ப்பால் பொங்கத் தொடங்குகிறது தை.

தமிழ்க்கவிதை பல ஆயிரம் வயதுகளையுடையது. பல அடுக்குகளைக் கொண்டது. எல்லா அடுக்குகளுக்கும் இடம் கொடுத்தவை கண்ணதாசன், வானம்பாடி, அன்னம் போன்ற இலக்கிய இதழ்கள். அந்த இலக்கியப் பெருந்தன்மை இன்றுள்ள இலக்கிய இதழ்களுக்கு இல்லை. ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து எழுத வைத்து அவர்கள் மட்டும்தாம் கவிகள் என்று அவை நிறுவ நினைக்கின்றன.

ஆனால், இப்போதுதான் தமிழ்க்கவிதைகள் தனித்த அடையாளங்களோடு வான் பார்த்துக் கிளை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அந்த மரங்களின் கிளைகளில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகத் தொட்டில்கள் ஆடுகின்றன. உழுத களைப்போடு வந்து பசியாற தூக்குச் சட்டிகள் கஞ்சியோடு காத்திருக்கின்றன.

வீட்டுக்குள் கவிதையை ஒரு போன்சாய் போல வளர்க்கும் குழு மனப்பான்மை கொண்ட அந்த வெள்ளைக் கவிஞர்களுக்கு இந்தப் பெருமரங்களின் வளர்ச்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த மரங்களின் வேர்களால் தங்கள் வீட்டுச்சுவர்களில் விரிசல் விழுமோ எனப் பயந்து நடுங்குகிறார்கள்.

எல்லா ஒடுக்குமுறைகளையும், மூடுதிரைகளையும் கடந்து ஒதுக்கப்பட்ட சாதியின் குரலும் ஒடுக்கப்பட்ட பெண்ணியக் குரலும் இன்றைய கவிதையின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழ்த் தேசியம் சார்ந்து எழும் இன்றைய காலத்தின் குரலைப் பதிவு செய்வதற்காகவே வருகிறது தை.

தமிழில் தனித்த அடையாளங்களோடு எழுத வருகிற புதிய கவிஞர்களை உலகத் தமிழர்களுக்கெல்லாம் தை அறிமுகப்படுத்தும். மறைக்கப்படும் இலக்கிய வரலாற்றை நேர்படுத்தும். இலக்கிய நேர்மையோடு ஒரு முழுமையான கவிதை இதழாகத் தொடரும்.

புதிதாக எழுத வருகிறவர்களுக்கும் புரிதலோடு எழுதுகிறவர்களுக்கும் இடையில் ஒரு தமிழ்ப்பாலமாய் தை இருக்கும்.

வாருங்கள் கை கோத்து நடப்போம்.

-அறிவுமதி-