சுயசரிதை
திருமணத்திற்கு முன்பான
புணர்ச்சித் திருடர்களின்
விடுதி இரவுகளில்
ஒழுகிய உயிரணுக்கள்
என்னைச் செய்திருக்கலாம்
சதை சலித்துக்
காதல் துப்பிய
கள்வனை வெறுத்து
மறுவாழ்வு விரும்பி
மகாராசி யாரோ
யோனியிலிருந்து பிடுங்கி
கோயில் வாசலில்
கிடத்திப் போயிருக்கலாம்.
மெய் விற்று
உயிர் சேமிப்பவளின்
ஒழுக்குக் குடிசையின்
காலொடிந்த கட்டிலில்
ஆணுறை மறந்த எவனோ
எனக்கு அப்பாவாகி
முடித்த அலுப்பில்
புகை ஊதிய படியே
நடந்திருக்கலாம்.
உலகத்துக்குப் பயந்த
உடைந்த நெஞ்சுக்காரி
யாரோ ஒருத்தி
கட்டும் துணியில் சுத்தி
குப்பைத் தொட்டியில்
வீசி விரைந்திருக்கலாம்
எதற்கோ ஏனோ
எங்கய்யோ எப்போதோ
நிச்சயம்
ஒருத்தி முந்தானை
விரித்திருக்க வேண்டும்
ஒருவன் மூச்சு
வாங்கியிருக்க வேண்டும்
இப்போது உங்கள் மனதை
குண்டூசி தைத்துத் தாக்கலாம்
நீங்களாகக் கூட
இருக்கக் கூடும்
எனது அப்பாவாகவோ
அம்மாவாகவோ.
